‘மக்களிடையே எந்த அதிருப்தியும், எதிர்ப்பலையும் இல்லை’ 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி மலரும் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு


‘மக்களிடையே எந்த அதிருப்தியும், எதிர்ப்பலையும் இல்லை’ 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி மலரும் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
x
தினத்தந்தி 15 Oct 2020 9:00 AM IST (Updated: 15 Oct 2020 9:00 AM IST)
t-max-icont-min-icon

மக்களிடையே எந்த அதிருப்தியும், எதிர்ப்பலையும் இல்லை, மீண்டும் 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் காணை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கல்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய செயலாளரும், விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஷெரீப், மாவட்ட தலைவர் பிரபாகரன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதர், கலியன், அரங்கநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் ராஜகோபால், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.

முகாமில் மாவட்ட செயலாளரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பாசறை உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தும், புதியதாக கட்சியில் இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை அட்டையை வழங்கியும் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

2011-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது. அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் பாசறை உறுப்பினர்கள். அவரது மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றிணைந்து பாசறை உறுப்பினர் சேர்க்கையை சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா நம்மோடு இல்லாமல் இன்னும் 4 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறோம். அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சர் ஆகலாம். இது தி.மு.க.வில் நடக்குமா?. கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு சாதாரண தொண்டன் இன்று முதல்-அமைச்சராக இருக்கிறார். இது அ.தி.மு.க.வில் மட்டுமே நடக்கும்.

இந்த இயக்கம் தொண்டர்களால் நடத்தப்படுகிற இயக்கம், மக்களுக்காக நடக்கிற ஆட்சி. இந்த ஆட்சி மீது மக்களிடையே எந்த அதிருப்தியும் இல்லை, எதிர்ப்பலையும் இல்லை, நல்லெண்ணம்தான் இருக்கிறது. அதை வாக்குகளாக மாற்றுகிற பொறுப்பு பாசறை உறுப்பினர்களிடம் உள்ளது. இன்றைக்கு ஜெயலலிதா நம்மோடு இல்லாவிட்டாலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொடுத்த இரட்டை இலை சின்னம் நம்மிடம் இருக்கிறது. வரக்கூடிய தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்காக அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் சண்முகம், ஒன்றிய முன்னாள் பாசறை செயலாளர் வக்கீல் நாகராஜ், வக்கீல் பற்குணன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் விக்ரமன், ஒன்றிய பாசறை துணை செயலாளர் தமிழ்ஒளி, கிளை செயலாளர்கள் சேட்டு, சக்திவேல், ஆறுமுகம், பாரிவள்ளல், சண்முகம், ஜெய்சங்கர், தங்கமணி, மாணிக்கம், குப்புசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் நெடுஞ்செழியன், ரவிசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story