மணல் கடத்தல் கும்பலுக்காக திருடப்பட்ட 31 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு; 7 பேர் கைது


மணல் கடத்தல் கும்பலுக்காக திருடப்பட்ட 31 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு; 7 பேர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2020 9:09 AM IST (Updated: 15 Oct 2020 9:09 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் பகுதியில் மணல் கடத்தல் கும்பலுக்காக மோட்டார் சைக்கிள்கள் திருடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 31 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நெல்லிக்குப்பம்,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போயின. இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தவச்செல்வம், ஆனந்தன், தீபன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பண்ருட்டி பகுதியை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நடுவீரப்பட்டு, புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் ஆகிய பகுதிகளில் 31 மோட்டார் சைக்கிள்களை திருடி, மெக்கானிக் மற்றும் வியாபாரி மூலம் மணல் கடத்தும் கும்பலுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

தொடர்ந்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பண்ருட்டி பகுதியை சேர்ந்த நீலகண்டன் (வயது 25), மோகன்(25), தங்கராசு(32), செந்தில்குமார்(43), புதுப்பேட்டை திருத்துறையூரை சேர்ந்த வெங்கடேசன்(33), எழிலரசன்(19), ராசாப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் (22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 31 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. நெல்லிக்குப்பம் பகுதியில் தொடர் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, மீட்கப்பட்ட இருசக்கர வாகனங்களை பார்வையிட்டு, கைதான 7 பேரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து திருட்டு கும்பலை பிடித்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் தவச்செல்வம், ஆனந்தன், தீபன் ஆகியோரை பாராட்டினார்.

Next Story