கடலூர் அரசு மருத்துவமனையில் குறைந்த எடையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை எடை அதிகரிப்பிற்கு பிறகு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்


கடலூர் அரசு மருத்துவமனையில் குறைந்த எடையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை எடை அதிகரிப்பிற்கு பிறகு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 15 Oct 2020 9:13 AM IST (Updated: 15 Oct 2020 9:13 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு மருத்துவமனையில் குறைந்த எடையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். குழந்தைகள் எடை அதிகரிப்பிற்கு பிறகு நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடலூர்,

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி, வல்லத்துறை, திருவந்திபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு குழந்தை பிறந்ததில், ஒரு குழந்தை 830 கிராம், மற்றொரு குழந்தை 890 கிராம், 3-வது குழந்தை 1 கிலோ 300 கிராம் எடை மட்டுமே இருந்தது. (சராசரியாக குழந்தை 2½ கிலோ எடை இருக்க வேண்டும்.)

இதையடுத்து அந்த 3 குழந்தைகளும் மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா காலத்திலும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எடை குறைவான குழந்தைகளுக்கு கண், காது, மூளை ஆகியவை பாதிக்கும். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழக்கும் அபாயமும் ஏற்படும். இதை தவிர்க்கும் வகையில் டாக்டர்கள், செவிலியர்கள் தீவிர கண்காணிப்பில் 3 குழந்தைகளும் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

இதற்கிடையில் தாய்ப்பாலுடன் தேவையான ஊட்டச்சத்து மருந்துகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து கண், காது மற்றும் மூளை ஸ்கேன் செய்யப்பட்டது. சிறப்பு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டன. தற்போது அந்த குழந்தைகள் தலா 1½ கிலோ எடையை தாண்டியது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு பிறகு அந்த 3 குழந்தைகளும் அவர்களின் தாய்மார்களுடன் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே 650 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான நிகழ்ச்சியில் இணை இயக்குனர் ரமேஷ்பாபு கலந்து கொண்டு, டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், செவிலியர்களை பாராட்டினார். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாய்லீலா, நிலைய மருத்துவர் டாக்டர் குமார், குழந்தை நல பிரிவு தலைமை டாக்டர் கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story