திருப்பூரில் இரவில் மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கும் முக்கிய சாலைகள் பொதுமக்கள் அச்சம்


திருப்பூரில் இரவில் மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கும் முக்கிய சாலைகள் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 15 Oct 2020 9:26 AM IST (Updated: 15 Oct 2020 9:26 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மின்விளக்குகளில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக அவை எரியாததால் இரவில் பிரதான சாலைகள் இருளில் மூழ்குவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகரில் அவினாசி ரோடு, பி.என்.ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, காங்கேயம் ரோடு, மங்கலம் ரோடு உள்ளிட்ட சாலைகள் பிரதான சாலைகளாக அமைந்துள்ளன.

இதில் அனைத்து சாலைகளிலும் சாலையின் மைய தடுப்புச்சுவர் மற்றும் சாலையோரங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.

இந்த நிலையில் திருப்பூரில் உள்ள முக்கிய சாலைகளில் பல்வேறு இடங்களில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் மின்விளக்குள் எரிவது இல்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் முக்கிய சாலைகள் இருளில் மூழ்கி காணப்படுகின்றன. குறிப்பாக பி.என்.ரோட்டில் சாந்தி தியேட்டர் முதல் புதிய பஸ் நிலையம் வரையிலும், புதிய பஸ் நிலையம் முதல் போயம்பாளையம் வரையிலும் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிவதே இல்லை.

இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை தெருநாய்கள் விரட்டுவதால் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி பல்வேறு குற்ற சம்பவங்களும் நடைபெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. பல மாதங்களாக இதே நிலை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் இதுவரை சரிசெய்யப்படவில்லை.

தொழில்நகரம் என்பதால் இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் திருப்பூரில் இருப்பது வழக்கம். ஆனால் தற்போது நகரின் முக்கிய சாலைகள் இருளில் மூழ்கி காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே திருப்பூர் மாநகராட்சி முழுவதும் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை பழுது நீக்கி, உடனடியாக எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story