சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை படம்பிடிக்கும் கண்காணிப்பு கேமரா


சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை படம்பிடிக்கும் கண்காணிப்பு கேமரா
x
தினத்தந்தி 15 Oct 2020 5:12 AM GMT (Updated: 15 Oct 2020 5:12 AM GMT)

சேலத்தில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை கண்காணிப்பு கேமராக்கள் படம் பிடிக்கின்றன.

சேலம்,

சேலம் மாநகரில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகர போலீசார் சார்பில் சேலம் 5 ரோடு ரவுண்டானாவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க 16 ஏ.என்.பி.ஆர். நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், காரில் ‘சீட் பெல்ட்‘ அணியாமல் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் வாகன நம்பர் பிளேட்டுகளை தானாகவே படம் பிடிக்கும் வகையில் இந்த கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு ஆன்லைன் அபராத தொகைக்கான ரசீது அனுப்பும் வகையில் தொழில்நுட்பத்துடன் (சர்வர்) அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க ஏ.என்.பி.ஆர். என்ற நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது சோதனை ஓட்டம் தான் நடைபெற்று வருகிறது. மேலும் இது விரைவில் அமலுக்கு வரும்.

இந்த சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி யார் சென்றாலும் கண்காணிப்பு கேமராக்களில் அவர்களுடைய வாகனத்தின் நம்பர் பிளேட் தானாக படம் பிடித்துவிடும். இந்த கண்காண்ப்பு கேமராக்களில் ஒரு மணி நேரத்துக்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை படம்பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செல்போன் மற்றும் இ-சேவை மூலம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story