பெரம்பலூர் அருகே விவசாயி வீட்டில் 9 பவுன் நகை-ரூ.1½ லட்சம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


பெரம்பலூர் அருகே விவசாயி வீட்டில் 9 பவுன் நகை-ரூ.1½ லட்சம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Oct 2020 11:12 AM IST (Updated: 15 Oct 2020 11:12 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே விவசாயி வீட்டில் 9 பவுன் நகையும், 1½ லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள வடக்குமாதவி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பிள்ளை(வயது 63). விவசாயியான இவருக்கு பூவாயி என்ற மனைவியும், கணபதி, அசோக் என்கிற 2 மகன்களும் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. இதில் அசோக், அவருடைய மனைவி வனிதா ஆகியோர் செல்லப்பிள்ளை, பூவாயி, செல்லப்பிள்ளையின் தாய் பச்சையம்மாள் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கணபதி கொரோனா ஊரடங்கினால் தற்போது சொந்த ஊரில், செல்லப்பிள்ளையின் வீட்டு அருகே உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணபதி தனது குடும்பத்தினருடன் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அசோக், வனிதாவுடன் அருகே உள்ள கணபதி வீட்டிற்கு தூங்க சென்றார். இதையடுத்து வீட்டின் கதவை பூட்டாமலேயே செல்லப்பிள்ளை, அவருடைய மனைவி மற்றும் தாய் ஆகியோர் வீட்டின் முன்பக்க அறையில் தூங்கியுள்ளனர்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் செல்லப்பிள்ளை எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள 2 அறைகளில் இருந்த பீரோக்கள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகே சென்று பார்த்தபோது ஒரு பீரோவில் இருந்த வனிதாவின் 9 பவுன் நகையும், மற்றொரு அறையில் இருந்த பீரோவில் விவசாய கடனாக கூட்டுறவு வங்கியில் இருந்து வாங்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கமும் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

மேலும் மர்மநபர்கள் நகை, பணத்தை திருடிவிட்டு, அவை இருந்த கைப்பைகளை வீட்டின் அருகே தூக்கி வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து உடனடியாக செல்லப்பிள்ளை பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நள்ளிரவில் திருட்டு நடந்தபோது, வீட்டில் தூங்கி கொண்டிருந்த செல்லப்பிள்ளை உள்பட 3 பேரும் எழுந்திருக்கவில்லை. மேலும் செல்லப்பிள்ளையின் வளர்ப்பு நாயும் குரைக்கவில்லை. இதனால் செல்லப்பிள்ளை உள்பட 3 பேரும் மீதும், அவரது வளர்ப்பு நாய் மீதும் மர்மநபர்கள் மயக்க மருந்து தெளித்து இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இது தொடர்பாக செல்லப்பிள்ளை கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். செல்லப்பிள்ளையின் வீட்டின் கதவு இரவில் பூட்டப்படாமல் இருப்பதை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story