மாவட்ட செய்திகள்

போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்மச்சாவு: பேரையூர் தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் - அங்கேயே சமைத்து சாப்பிட்டனர் + "||" + Mysterious death of a young man who went to the police investigation: At the Peraiyur taluka office Villagers sit in struggle

போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்மச்சாவு: பேரையூர் தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் - அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்

போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்மச்சாவு: பேரையூர் தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் - அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்
போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் நீதி வழங்கக் கோரி கிராம மக்கள் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பேரையூர்,

பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் ரமேஷ். கடந்த மாதம் 16-ந் தேதி சாப்டூர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரமேஷ் மறுநாள் காலையில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அந்த கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்கண்ணன் மற்றும் பரமசிவம் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்களும் மீண்டும் வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் பணிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் ரமேஷின் சாவுக்கு காரணமாக இருந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்களையும் மீண்டும் பணியில் சேர்த்துள்ளனர். போலீசார் வேண்டுமென்றே நாடகமாடி எங்களை ஏமாற்றி விட்டனர். எனவே அவர்கள் இருவரையும் பணியில் இருந்து நீக்கி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ரமேஷின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அணைக்கரைப்பட்டியில் உள்ள நாடக மேடை முன்பு நேற்று முன் தினம் கண்ணில் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அரசு தங்களது போராட்டங்களை கண்டுகொள்ளவில்லை என்று கூறி நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கிராமத்தில் இருந்து ஒன்று திரண்டு பேரையூர் தாலுகா அலுவலகம் முன்பு குவிந்தனர்.

பின்னர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை கையில் எடுத்து வந்து அவற்றை ஒப்படைக்க போவதாக கூறினர். மேலும் அவர்கள் தாலுகா அலுவலக வளாகத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. ராஜ்குமார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் கிராம மக்கள் சமரசம் ஆகாததால் கலெக்டரை சந்தித்துவிட்டு முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறி விட்டு ஆர்.டி.ஓ. மதுரைக்கு சென்றார்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை பேரையூர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.