மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டில் ரூ.2½ கோடி பறிமுதல் - 3½ கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.2½ கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3½ கிலோ தங்கம், 6½ கிலோ வெள்ளிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டது.
ராணிப்பேட்டை,
வேலூர் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் வேலூர் மண்டல இணை முதன்மை பொறியாளராக பணிபுரிபவர் பன்னீர்செல்வம் (வயது 45). வேலூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், ஓசூர் ஆகிய பகுதிகள் இவருடைய கட்டுப்பாட்டில் வருகிறது.
இந்தப்பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்க உரிமம் வழங்குவது, பழைய உரிமங்களை புதுப்பிப்பது போன்ற பணிகளை இவர் கவனித்து வந்தார். இந்த பணிகளுக்கு லஞ்சம் பெறுவதற்காக இவர் மாதந்தோறும் கூட்டம் நடத்தி பணம் பெற்று வந்ததாக புகார்கள் வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காட்பாடியில் அவருடைய தலைமையில் கூட்டம் நடப்பதாகவும், அதில் பண பரிமாற்றம் நடப்பதாகவும் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சென்றனர். அதற்குள் கூட்டம் முடிந்து பன்னீர்செல்வம்காரில் வீட்டுக்கு புறப்பட்டு விட்டார். அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார் காட்பாடியில் உள்ள வீட்டிலும், காரிலும் சோதனை நடத்தினர். அப்போது ரூ.33 லட்சத்து 73 ஆயிரத்தை அவர்கள் கைப்பற்றினர்.
தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை அருகே, ராணி பெல் நகரில், வளையாபதி தெருவில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர் மாலை சுமார் 6.30 மணிவரை சோதனை நடந்தது.
இந்த சோதனையில் பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து ரூ2½ கோடி அளவுக்கு பணம், சுமார் 3½ கிலோ தங்கமும், 6½ கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சொத்து பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ரூபாய் எண்ணும் 4 எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பணம் எண்ணப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனையின் முடிவில் பணத்தின் அளவும், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் அளவும் மேலும் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story