6 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் சினிமா தியேட்டர்கள் இன்று முதல் திறப்பு


6 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் சினிமா தியேட்டர்கள் இன்று முதல் திறப்பு
x
தினத்தந்தி 16 Oct 2020 3:36 AM IST (Updated: 16 Oct 2020 3:36 AM IST)
t-max-icont-min-icon

6 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் சினிமா தியேட்டர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் சினிமா தியேட்டர்கள் 15-ந் தேதி (நேற்று) முதல் திறக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மாநிலத்தில் தியேட்டர்களை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திறக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கர்நாடகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது.

இதுபற்றி தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி பிரகாஷ் என்பவர் கூறுகையில், “கர்நாடகத்தில் தியேட்டர்களை இன்றே (நேற்று) திறக்க அனுமதி வழங்கி இருந்தாலும், நாங்கள் நாளை(இன்று) முதல் தான் திறக்க முடிவு செய்துள்ளோம். தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுத்துள்ளோம். தியேட்டர்களை வியாழக்கிழமை(நேற்று) திறக்காததில் எந்த அர்த்தமும் இல்லை“ என்றார்.

இன்னொரு தியேட்டரின் மேலாளர் கூறுகையில், “கர்நாடகத்தில் வருகிற 23-ந் தேதி முதல் தியேட்டர்களை திறக்க முடிவு செய்துள்ளோம். ஆனால் பெரும்பாலான தியேட்டர்கள் நாளை (அதாவது இன்று) திறக்கப்படுகிறது“ என்றார். தியேட்டர்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கர்நாடக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கட்டாயம் முகக்கவசம்

அதில், “கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தியேட்டர்களை திறக்க அனுமதி இல்லை. சினிமா பார்க்க வருபவர்களிடையே ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பண பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள வேண்டும்“ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story