7 மாதங்களுக்குப் பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு குறைவான ரசிகர்களே வந்தனர்


7 மாதங்களுக்குப் பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு குறைவான ரசிகர்களே வந்தனர்
x
தினத்தந்தி 15 Oct 2020 10:54 PM GMT (Updated: 15 Oct 2020 10:54 PM GMT)

புதுச்சேரியில் 7 மாதங்களுக்குப் பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்து இருந்தனர்.

புதுச்சேரி,

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி பள்ளிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள், சுற்றுலாதலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதன்பின் அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து கடைகள், ஓட்டல்கள், கடற்கரை திறக்கப்பட்டன. போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு மாமூல் வாழ்க்கை திரும்பியது. இந்தநிலையில் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி திருவள்ளுவர் சாலையில் உள்ள ஷண்முகா, அண்ணா சாலையில் உள்ள ராஜா ஆகிய தியேட்டர்கள் மட்டும் நேற்று திறக்கப்பட்டன. ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன.

ஊரடங்கு தளர்வுக்குப்பின் முதல்நாள் முதல் காட்சியில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந் தது. இளைஞர்கள், இளம்பெண்கள் வந்து இருந்தனர். ஷண்முகா தியேட்டருக்கு வந்த அனைவருக்கும் முகக்கவசமும், 3டி படம் என்பதால் கண்ணாடியும் வழங்கப்பட்டது.

சமூக இடைவெளி

சமூக இடைவெளி விடப்பட்டு இருக்கைகளில் ரசிகர்கள் உட்கார வைக்கப்பட்டனர். வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் கட்டணம் குறைக்கப்பட்டு இருந்தது. புதிய படங்கள் வராததால் மற்ற தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. தீபாவளிக்கு முன் மற்ற தியேட்டர்களும் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்படும் என்று தெரிகிறது.

Next Story