காண்டிராக்டர் கொலையில் 5 பேர் கைது மாமூல் தர மறுத்ததால் தீர்த்துக் கட்டியதாக பரபரப்பு தகவல்


காண்டிராக்டர் கொலையில் 5 பேர் கைது மாமூல் தர மறுத்ததால் தீர்த்துக் கட்டியதாக பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2020 4:27 AM IST (Updated: 16 Oct 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

புதுவை காண்டிராக்டர் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மாமூல் தராத ஆத்திரத்தில் அவரை தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தை அடுத்த தர்மாபுரியை சேர்ந்தவர் ஜீவா என்கிற இருசப்பன்(வயது 42). மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பும் லேபர் காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இவருக்கு கல்பனாதேவி(38) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் மின்துறை அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது ஜீவாவை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த மர்ம கும்பல் சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது.

5 பேர் கைது

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜீவா கொலையில் தொடர்புடைய காந்திதிருநல்லூர் பகுதியை சேர்ந்த ஜீவா, ஜோசப், ஆகாஷ், சசிக்குமார், வாணரப்பேட்டை முருகன் ஆகிய 5 பேரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

கைதானவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். இதில், காந்திதிருநல்லூர் பகுதியை சேர்ந்த பிரபல தாதா அய்யப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளான ரவுடிகள் மாமூல் கேட்டு ஜீவாவை மிரட்டி உள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தை தொடர்ந்து அய்யப்பன் தூண்டுதலின் பேரில் அவரது கூட்டாளிகள் ஜீவாவை கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

காங்கிரஸ் பிரமுகர் மீது புகார்

விசாரணைக்குப்பின் கைதான 5 பேரையும் கொரோனா பரிசோதனைக்காக ஜிப்மரில் போலீசார் அனுமதிக்க உள்ளனர். ஆய்வக முடிவு வந்ததும் அவர்களை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இவர்களில் அய்யப்பன் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும், ஜோசப், முருகன், சசி ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

காண்டிராக்டர் ஜீவா கொலையில் தர்மாபுரியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கண்ணனுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழிற்சாலைகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதில் ஜீவாவுக்கும், கண்ணனுக்கும் போட்டி இருந்ததாகவும் இதன் காரணமாகவும் இந்த கொலை நடந்து இருக்கலாமா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

உறவினர்கள் மறியல்

இதற்கிடையே ஜீவாவின் உடல் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாலையில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இதையொட்டி அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தர்மாபுரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் ஜீவா கொலையில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று காலை மேட்டுப்பாளையம் முன்பு வழுதாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொலை தொடர்பாக சிலரை கைது செய்து இருப்பதாகவும், இதில் தொடர்புடைய மற்ற நபர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்தனர். இதை ஏற்று மறியல் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story