தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்


தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 16 Oct 2020 12:15 AM GMT (Updated: 16 Oct 2020 12:15 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் தமிழகத்தில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி நேற்று முதல் அரசு வழிகாட்டுதலுடன் தியேட்டர்கள் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும். ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்யவேண்டும். ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னரும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்.

முக கவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்ய பார்வையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ரசிகர்கள் தியேட்டருக்கு செல்லும்போது கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும். திரைப்பட இடைவேளையின் போது ரசிகர்கள் இருக்கைகளை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது.

ரசிகர்கள் ஏமாற்றம்

எனவே, 6 மாத காலத்திற்கு பிறகு தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் சுத்தப்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

ஆனால் தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி அளிக்காததால் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story