திண்டுக்கல்லில் பரபரப்பு: போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் பயங்கர வெடிச்சத்தம் - 7 நாட்டு வெடிகளை கைப்பற்றி விசாரணை


திண்டுக்கல்லில் பரபரப்பு: போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் பயங்கர வெடிச்சத்தம் - 7 நாட்டு வெடிகளை கைப்பற்றி விசாரணை
x
தினத்தந்தி 16 Oct 2020 7:29 AM IST (Updated: 16 Oct 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் நாட்டுவெடி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிக்காமல் கிடந்த 7 நாட்டு வெடிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ரவுண்டுரோட்டில் போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகம், தாலுகா போலீஸ் நிலையம், மதுவிலக்கு போலீஸ் நிலையம் ஆகியவை உள்ளன. இதற்கு அருகில் போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு திண்டுக்கல் நகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் பணியாற்றும் போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இரவு, பகல் என்று பணி முடிந்து போலீசார் வருவதும், வீட்டில் இருந்து பணிக்கு செல்வதுமாக இருப்பார்கள். மேலும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கவில்லை. எனவே, குடியிருப்பு வளாகத்தில் காலியாக இருக்கும் பகுதிகளில் மாணவர்கள் விளையாடி கொண்டிருப்பார்கள். இதனால் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும்.

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் ‘டமார்’ என்று வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து குடியிருப்புவாசிகள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது ஒரு நாய் தலை சிதறி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. மேலும் அதன் வாய்ப்பகுதியில் வெடிக்கு பயன்படுத்தும் கரிமருந்து துகள்கள் இருந்தன.

இதையடுத்து வடக்கு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் கீழே கிடந்த நாட்டுவெடியை குடியிருப்பு வளாகத்துக்கு தூக்கி வந்து நாய் கடித்தபோது அது வெடித்து தலைசிதறி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் குடியிருப்புவாசிகள் அனைவரும் வீட்டில் இருந்தனர். குடியிருப்பின் பின்பகுதியில் உள்ள காலியிடத்தில் மாணவர்கள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது குடியிருப்பின் முன்பகுதியில் ‘டமார்’ என்று பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து குடியிருப்புவாசிகள் அனைவரும் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது கியாஸ் சிலிண்டர் கொண்டு வந்த ஆட்டோ குறிப்பிட்ட இடத்தில் வந்த போது வெடிச்சத்தம் கேட்டது தெரியவந்தது. மேலும் சாலையில் கரிமருந்து துகள் கிடந்தன. எனவே, அதுபற்றி வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

விசாரணையில் தெருவில் கிடந்த நாட்டுவெடி மீது ஆட்டோ ஏறியதால், அது வெடித்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் சல்லடை போட்டு தேடினர். அப்போது சிலஅடி தூரத்தில் ஒரு பிளாஸ்டிக் பையில் 7 நாட்டுவெடிகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.

பின்னர் போலீசார் கூறுகையில், பிளாஸ்டிக் பையில் கிடந்தது தீபாவளி நேரத்தில் சிறுவர்கள் எறிந்து வெடிக்கும் நாட்டுவெடிகள் போன்று உள்ளன. எனினும் ஆய்வின் முடிவில் தான் தெரியவரும். மேலும் பிளாஸ்டிக் பையில் இருந்து கீழே விழுந்த நாட்டுவெடி, ஆட்டோ சக்கரத்தில் சிக்கி வெடித்து இருக்கலாம் என்று கூறினர்.

மேலும் நாட்டுவெடிகளை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் வீசியது யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல்லில் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் நாட்டுவெடி வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story