அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை பதவி நீக்ககோரி தர்மபுரியில் தி.மு.க. இளைஞர், மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்


அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை பதவி நீக்ககோரி தர்மபுரியில் தி.மு.க. இளைஞர், மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2020 4:21 AM GMT (Updated: 16 Oct 2020 4:21 AM GMT)

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி முன்பு தி.மு.க இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தர்மபுரி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தர்மபுரி அடுத்துள்ள செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன் மற்றும் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மகேஷ் குமார், பிரகாஷ், சிட்டிபாபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் முல்லைவேந்தன், அண்ணாதுரை, மணிவண்ணன், முத்துக்குமார், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செல்லதுரை வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை டாக்டர் செந்தில்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார். பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ.மாநில சட்டத் திருத்த குழு இணைச்செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். தமிழகத்தில் பாரம்பரியமிக்க அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் நோக்கில் செயல்படும் துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். கல்விக் கொள்கையில் மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது. அண்ணா பல்கலைக்கழக விவகாரங்களில் தமிழக அரசு உடனே தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்ட பொருளாளர் தர்ம செல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் சூடப்பட்டி சுப்பிரமணி, முனிராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.கே.முரளி, சார்பு அமைப்பு மாவட்ட அமைப்பாளர்கள் பி.கே.முருகன், சந்திரமோகன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், தேசிங்குராஜன், சித்தார்த்தன், சிவப்பிரகாசம், நகர செயலாளர்கள் மணி, ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சேட்டு நன்றி கூறினார்.

Next Story