ராமநாதபுரம் அருகே, தோட்டத்தில் பதுக்கிய வெடிகுண்டுகளை கண்டுபிடித்த மோப்ப நாய்- 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை


ராமநாதபுரம் அருகே, தோட்டத்தில் பதுக்கிய வெடிகுண்டுகளை கண்டுபிடித்த மோப்ப நாய்- 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Oct 2020 9:00 AM GMT (Updated: 16 Oct 2020 8:54 AM GMT)

ராமநாதபுரம் அருகே தோட்டத்தில் பதுக்கிய வெடிகுண்டுகளை போலீஸ் மோப்ப நாய் கண்டுபிடித்தது. அவற்றை போலீசார் கைப்பற்றியதுடன், 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை பகுதியில் ஒரு தோட்டத்தில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, உடனடி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டார். அதன்பேரில் ராமநாதபுரம் துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் அடங்கிய படையினர் மோப்பநாய் உடன் வாலாந்தரவைக்கு விரைந்தனர்.

அப்போது வாலாந்தரவை பஸ் நிறுத்தத்தில் இருந்து மோப்ப நாய் மோப்பம் பிடித்தவாறு அந்த பகுதியில் ஊராட்சி உறுப்பினராக உள்ள சுரேஷ் என்பவரது தோட்டத்துக்கு ஓடிச்சென்று நின்றது.

இதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட போலீசார் தோட்டம் முழுவதும் சோதனையிட்டனர். சோதனையில் 2 வெடிகுண்டுகள் பிளாஸ்டிக் பையில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்து, அதை கைப்பற்றினர். வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் அதை சோதனையிட்டனர். இதில் அவை நாட்டு வெடிகுண்டுகள் என தெரியவந்தது.

இதுகுறித்த விசாரணையில், கடந்த 2018-ல் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக வந்தபோது கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டி.ஐ.ஜி. குடியிருப்பின் பக்கத்தில் வாலாந்தரவைச் சேர்ந்த கார்த்தி, இவரது நண்பர் விக்கி ஆகிய 2 பேரும் பெட்ரோல் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் கொலை செய்யப்பட்டு 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) வருவதையொட்டி அதற்கு பழிக்குபழி வாங்குவதற்காக இந்த நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தனவா? என்ற கோணத்தில் கேணிக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வாலாந்தரவைச் சேர்ந்த சரவணன், அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன், ரூபன், முருகன் ஆகியோரை பிடித்து அவர்களை தனித்தனி இடங்களில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று கடந்த வருடமும் நாட்டு வெடிகுண்டு இதே ஊரில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story