மதுரையில், ரெயில்வே போலீஸ்காரர் தற்கொலை
மதுரையில் ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை,
மதுரை ஊமச்சிக்குளம் திருமால்புரம் கோகுல்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். அவருடைய மகன் ஆறுமுகராஜா(வயது 33). இவர் திருச்சியில் ரெயில்வே போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். ஆறுமுகராஜாவுக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விடுமுறை எடுத்து ஆறுமுகராஜா ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் இரவில் தூங்க சென்ற அவர் மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து குடும்பத்தினர் கதவை தட்டி பார்த்தும் அவர் சத்தம் கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து உறவினர்கள் ஊமச்சிக்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு ஆறுமுகராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து அவரது தாயார் வீரலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊமச்சிக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில், ஆறுமுகராஜா திருமணம் ஆகாத மனவருத்தத்தில் இருந்து வந்ததாகவும், மேலும் உடல் நிலை பாதிப்பும் இருந்ததால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் தெரியவந்தது. மேலும் ஆறுமுகராஜாவின் அக்காள், தம்பி ஆகியோரும் மதுரையில் போலீசாக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story