தொழில்நுட்ப கோளாறு: ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் - ஊழியர்கள் எந்திரத்தை திரும்ப ஒப்படைத்ததால் பரபரப்பு


தொழில்நுட்ப கோளாறு: ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் - ஊழியர்கள் எந்திரத்தை திரும்ப ஒப்படைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Oct 2020 10:00 AM GMT (Updated: 16 Oct 2020 9:47 AM GMT)

தொழில்நுட்ப கோளாறினால் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்திரத்தை ஊழியர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் ஒப்படைத்தனர்.

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கான்சாபுரம், கூமாபட்டி, மேலக்கோபாலபுரம், புதுப்பட்டி, சேது நாராயணபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், இலந்தைகுளம் ஆகிய ஊர்களில் கடந்த 4 நாட்களாக ரேஷன் கடைகளில் தொழில்நுட்ப கோளாறினால் விற்பனை முனைய எந்திரம் சரியாக செயல்படவில்லை.

இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆதலால் ரேஷன் கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரேஷன் கடை ஊழியர்கள் வத்திராயிருப்பில் உள்ள கூட்டுறவு பண்டகசாலையில் அந்த எந்திரங்களை ஒப்படைத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தனி வருவாய் அலுவலர் (குடிமைப்பொருள்) நாகேஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன், பண்டகசாலை தலைவர் கோவிந்தன் ஆகியோர் ரேஷன் கடை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் எந்திரங்களுக்கு உண்டான சிக்னல் முறையாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திரும்ப இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மதியத்திற்கு பிறகு ரேஷன் கடை ஊழியர்கள் எந்திரங்களை திரும்ப பெற்றுக்கொண்டு கடைகளுக்கு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story