சிவகங்கையை அடுத்த ஒக்கூரில் சங்க கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு


சிவகங்கையை அடுத்த ஒக்கூரில் சங்க கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2020 4:15 PM IST (Updated: 16 Oct 2020 4:06 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே சங்க கால கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த ஒக்கூர் அண்ணாநகர் பகுதியில் 2,500 முதல் 3,500 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தோடு தொடர்புடைய கல் வட்டங்களை கொல்லங்குடியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் புலவர் கா.காளிராசா மற்றும் தொல்நடைக்குழு ஆசிரியர் நரசிம்மா ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக தொல்லியல் ஆய்வாளர் புலவர் காளிராசா கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் சங்க காலத்தோடு தொடர்புடைய ஊராக அறியப்பட்டுள்ளது, ஒக்கூர் மாசாத்தியார் பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. இதில் புறநானூற்று பாடல் மிகுந்த சிறப்புடையதாக போற்றப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு பொருந்திய புலவர் மாசாத்தியார் வாழ்விடமாக ஒக்கூர் விளங்கி இருக்கிறது. அவர் காலமாக இந்த கல்வட்டம் இருந்திருக்கலாம் பெருங்கற்காலத்தில் இறந்த மனிதனை புதைத்து சடங்குகள் செய்து வந்துள்ளனர்.இறந்த உடலை பாதுகாக்க அதை சுற்றி பெரும் கற்களை அடுக்கி வைத்துள்ளனர்.

இவ்வாறான கல் வட்டங்கள் பல பகுதிகளில் காணக்கிடைக்கின்றன. கல்திட்டை, கல் படுக்கை, குடைகல், குத்துக்கல் அல்லது நெடுங்காலம் போன்றவை பெருங்கற்கால அமைப்பு முறைகளாகும். கல் வட்டங்கள், கல் படுக்கைகள் தொடர்பான செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

மேலும் ஒக்கூரை அடுத்த அண்ணாநகர் பகுதியில் முதன்மை சாலையின் கிழக்கு பக்கத்தில் கிழக்கு, மேற்காக ஓடும் ஓடையை ஒட்டிய பகுதியில் கல் வட்டங்கள் உள்ளன. மலைப்பகுதியில் வெள்ளைக்கல்லாலும் மற்ற செம்மண் பகுதிகளில் அங்கு கிடைக்கும் செம்பூரான் கற்களாலும் கல் வட்டங்கள் அமைக்கப்படும். இந்த இடத்தில் 2 கற்களும் கலந்து காணக்கிடைப்பது வியப்பாக உள்ளது. குத்துக்கல் ஒன்று அப்புறப்படுத்தப்பட்டு கிடைமட்டமாக கிடக்கிறது.

அத்துடன் பலகை கற்களை 4 பகுதிகளிலும் குத்தாக நிறுத்திவைத்து அறைபோல வடிவமைத்து அதில் உடலை அல்லது எலும்புகளை வைக்கும் முறை கற்படுக்கை என வழங்கப்படுகிறது. இந்த ஈமக்காட்டுப்பகுதியில் கற்படுக்கை ஒன்றும் காணப்படுகிறது.கல் வட்டங்களின் உள்பகுதியிலும் பின்னாளில் தனித்தும் தாழிகளில் இறந்த உடலை அல்லது எலும்புகளை வைத்து அடக்கம் செய்து வழிபடும் முறை இருந்தது. இந்த பகுதியில் சிதைந்த தாழி ஓடுகள் மேற்பரப்பு ஆய்வில் காணப்படுகின்றன.

கல்வட்டம் கற்படுக்கை தாழிகள் உள்ள ஈமக்காடுகளில் மூத்தோர் வழிபட்ட இடத்தில் தொடர்ந்து வழிபடும் முறை இன்றும் மக்களிடையே இருந்து வருகிறது. இங்கு இன்றும் வழிபாடு நீடித்து வருவதை காணமுடிகிறது. இப்பகுதிக்கு எதிரே உள்ள பகுதியிலும் ஒரு கல் மேலச்சாலூரைச் சேர்ந்த மக்களால் தொன்றுதொட்டு வழிபடப்பட்டு வருகிறது.தற்போது இந்த கல் வட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்து கல்வட்டம் இருந்ததற்கான எச்சமாக சிதைவுகள் வெளிப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.

Next Story