உசிலம்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை வாங்க மறுத்து ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
கோவில் திருவிழாவில் கொலை செய்யப்பட்டவர் உடலை வாங்க மறுத்து கிராமமக்கள் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அடுத்து எழுமலை அருகே உள்ள சூலப்புரத்தில் செல்லாண்டி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு இந்த கோவில் திருவிழாவின்போது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்தநிலையில் செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழாவை நடத்த ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர்.
இதைதொடர்ந்து கோவில் திருவிழா நடத்துவது குறித்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் கோவில் திருவிழாவை சில கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் திருவிழா 14-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவின்போது இதே ஊரை சேர்ந்த விவசாயி செல்லத்துரை(வயது 40) என்பவர் சாமி கும்பிட சென்றார்.
அவர் சிறிதுதூரம் நடந்து வந்தபோது ஒரு கும்பல் திடீரென அவரை சுற்றி வளைத்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் சூலப்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியது. செல்லத்துரை உடல் கிடந்த இடத்தில் அவரது உறவினர்களும், ஊர் மக்களும் திரண்டனர்.
பின்னர் செல்லத்துரையை, மற்றொரு பிரிவினர் வெட்டிக் கொலை செய்துவிட்டதாக கூறி மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சமசர பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செல்லத்துரையின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவரின் குடும்பத்திற்கு இலவசமாக வீடு வழங்க வேண்டும், செல்லத்துரை மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்க வேண்டும், கோவில் திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நாங்களே நடத்தவேண்டும், இந்த ஊரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கிராம மக்கள் முன்வைத்தனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் செல்லத்துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தரும் வரை செல்லத்துரையின் உடலை வாங்க மாட்டோம் என சூலப்புரம் கிராம மக்கள் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். இதைதொடர்ந்து ஆர்.டி.ஓ. ராஜ்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன், தாசில்தார் செந்தாமரை ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் கிராம மக்கள் சார்பில் ஊர் பெரியவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி, மூக்கையா, பாக்கியராஜ், பர்வதராஜன், வக்கீல் மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன், பாரதீய பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் முருகன், ஆவின் நிர்வாககுழு உறுப்பினர் துரை தனராஜன், மாவட்ட கவுன்சிலர் வக்கீல் காசி, தென்னிந்திய பார்வர்டு கட்சியின் மாநில செயலாளர் வக்கீல் சங்கிலி, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வபிரகாஷ், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகள் கோரிக்கைகள் குறித்து விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் செல்லத்துரை உடலை பெற்று சூலப்புரத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.
Related Tags :
Next Story