வேலூரில், கொரோனாவுக்கு 5 பேர் பலி


வேலூரில், கொரோனாவுக்கு 5 பேர் பலி
x
தினத்தந்தி 16 Oct 2020 1:30 PM GMT (Updated: 16 Oct 2020 1:13 PM GMT)

வேலூரில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.

வேலூர்,

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை பெறுபவர்களின் சிலர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விடுகின்றனர். அதன்படி நேற்று ஒரேநாளில் 5 பேர் இறந்துள்ளனர். அதன்விவரம் வருமாறு:-

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 56). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் 25-ந் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காட்பாடி அசோக்நகரை சேர்ந்த சாமுவேல் (67) என்பவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதியானது. பின்னர் அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பெத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 42 வயது பெண் உடல்நலக்குறைவால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வேலூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்தார்.

இதேபோல் படகுப்பம் பகுதியில் உள்ள மந்தை தெருவை சேர்ந்த 83 வயது முதியவருக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி (55). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் வசந்தி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இறந்தவர்களின் உடல்கள் பாதுகாக்கப்பட்ட முறையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூரில் நேற்று ஒரே நாளில் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story