மழையால் சேதம் அடைந்ததையடுத்து வரத்து குறைவு: சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பல்லாரி விலையும் கடும் உயர்வு - கிலோ ரூ.70-க்கு விற்பனை


மழையால் சேதம் அடைந்ததையடுத்து வரத்து குறைவு: சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பல்லாரி விலையும் கடும் உயர்வு - கிலோ ரூ.70-க்கு விற்பனை
x
தினத்தந்தி 16 Oct 2020 1:45 PM GMT (Updated: 16 Oct 2020 1:39 PM GMT)

மழையால் சேதம் அடைந்ததையடுத்து பல்லாரி வரத்து குறைந்தது. இதனால் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பல்லாரி விலையும் அதிகரித்து வருகிறது. கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடந்து வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், தேனி, சிவகங்கை, நிலக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.

மேலும் இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. இதனால் தஞ்சை மார்க்கெட்டில் கிலோ ரூ.40-க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் மழை பெய்து வருவதால் வெங்காயம் அழுகிய நிலையில் காணப்படுவதால் வரத்து குறைவாக உள்ளது. தஞ்சை மார்க்கெட்டிற்கு வெளி மாநிலங்களில் இருந்து தினமும் 100 டன் பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக 30 டன் அளவுக்குத்தான் வெங்காயம் வருகிறது. மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக பல்லாரி வரத்து இருப்பதால் விலை அதிகரித்து வருகிறது.மழையில் நனைவதால் ஒரு மூட்டைக்கு 10 கிலோ வரை வெங்காயம் அழுகிய நிலையில் காணப்படுகிறது. நேற்று ஒரு கிலோ வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. தரத்தில் சிறிய வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயம் உற்பத்தி குறைவாக உள்ளதால் அதன் விலை தான் அதிகரித்து வந்தது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது பெரிய வெங்காயமும் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து வெங்காயம் மொத்த வியாபாரி சிதம்பரம் கூறுகையில், “வெளி மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. பெரிய வெங்காயம் தற்போது 30 டன் வருகிறது. 30 டன் வந்த சின்ன வெங்காயம் தற்போது 6 டன் தான் வருகிறது. மேலும் பெரிய வெங்காயம் அதிக அளவில் அழுகிய நிலையில் காணப்படுகிறது.

இதனால் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால் இன்னும் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. தீபாவளி பண்டிகை வரை இந்த விலை உயர்வு காணப்படும்”என்றார்.

Next Story