ஊட்டியில் உள்ள பிரபல ஜூவல்லரியில் ரூ.30 லட்சம் தங்க நகைகளை திருடிய தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் கைது
ஊட்டியில் உள்ள பிரபல ஜூவல்லரியில் ரூ.30 லட்சம் தங்க நகைகளை திருடிய தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் செம்மனூர் என்ற பிரபல ஜூவல்லரி உள்ளது. இங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள கிளைக்கு ஆடிட்டிங் செய்வதற்காக பழைய தங்க நகைகள் கொண்டு செல்லப்பட்டது. அப்போது 50 பவுன் தங்க நகைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். பின்னர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர்.
அப்போது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சுகந்தலை கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் கணபதி (வயது 29), தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து அவரை கைது செய்து, ஊட்டிக்கு போலீசார் அழைத்து வந்தனர். அவரிடம் இருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-
கைது செய்யப்பட்ட கணபதி, அதே ஜூவல்லரியில் கணக்காளர் உள்ளிட்ட பிரிவுகளில் ஊழியராக பணியாற்றினார். அங்கிருந்த பழைய தங்க நகைகளை திருடிவிட்டு, அதே எடை உள்ள கவரிங் நகைகளை வைத்து உள்ளார். பின்னர் திருடிய தங்க நகைகளை பல இடங்களில் விற்று பணம் பெற்றார். அந்த பணத்தை கொண்டு விலை உயர்ந்த செல்போன் போன்றவற்றை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார். மேலும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு, அதற்காக ரூ.50 லட்சத்தை செலவழித்து உள்ளார். இந்த திருட்டில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story