கடந்த 3 நாட்களில் மராட்டியத்தில் கனமழைக்கு 47 பேர் பலி 2,300 வீடுகள் சேதம்


கடந்த 3 நாட்களில் மராட்டியத்தில் கனமழைக்கு 47 பேர் பலி 2,300 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 16 Oct 2020 9:13 PM GMT (Updated: 16 Oct 2020 9:13 PM GMT)

மராட்டியத்தில் கடந்த 3 நாட்களில் பெய்த கனமழைக்கு 47 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 300 வீடுகள் சேதம் அடைந்தன.

மும்பை,

மராட்டியத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 ாட்களாக பலத்த மழை பெய்தது. இதில் மேற்கு மராட்டியத்தில் உள்ள சோலாப்பூர் அதிக மழை பாதிப்பை சந்தித்த மாவட்டம் ஆகும். மேலும் புனே, கோலாப்பூர், சத்தாரா, சாங்கிலி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

மேலும் கடந்த 2 நாட்களாக கொங்கன் மற்றும் அவுரங்காபாத் மண்டலங்களில் பலத்த மழை பெய்தது. இதில் கொங்கன் மண்டலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 10 செ.மீ. மழை பெய்தது. மும்பையில் நேற்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் எதிர்பார்த்தப்படி மழை பெய்யவில்லை.

21 ஆயிரம் பேர் வெளியேற்றம்

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. குறிப்பாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தாழ்வான பகுதிகளில் வசித்த 21 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

47 பேர் பலி

இந்தநிலையில் புனே மாவட்டத்தை உள்ளடக்கிய மேற்கு மராட்டியம் மற்றும் மத்திய மராட்டியம், மும்பையையொட்டிய கொங்கன் பகுதியில் வெளுத்து வாங்கிய மழைக்கு 3 நாட்களில் 47 பேர் உயிரிழந்து இருப்பதாக அரசு நேற்று தெரிவித்தது. இதில் மேற்கு மராட்டியத்தில் 28 பேரும், மத்திய மராட்டியத்தில் 16 பேரும், கொங்கன் பகுதியில் 3 பேரும் உயிரிழந்தனர்.

மேலும் 2 ஆயிரத்து 300 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் கொங்கன் மண்டலத்தில் மட்டும் 326 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. 57 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. 513 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன.

மழையால் ஏற்பட்ட பெரும் சேத விவரங்கள் துல்லியாக கணக்கிடப்பட்டு, மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கப்படும் என்று பேரிடர் நிவாரணத்துறை மந்திரி விஜய் வடேடிவார் தெரிவித்தார்.

Next Story