வீடு வாடகைக்கு பார்ப்பது போல நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற வாலிபருக்கு தர்ம-அடி


வீடு வாடகைக்கு பார்ப்பது போல நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற வாலிபருக்கு தர்ம-அடி
x
தினத்தந்தி 16 Oct 2020 9:41 PM GMT (Updated: 16 Oct 2020 9:41 PM GMT)

வீடு வாடகைக்கு பார்ப்பது போல நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம-அடி கொடுத்துள்ளனர். இதில் அவரது கை முறிந்தது. தற்போது அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்களூரு,

பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பிரகதிநகரில் வசித்து வருபவர் லட்சுமிதேவி. இவர், தனது வீட்டை வாடகைக்கு விடுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், லட்சுமிதேவியின் வீட்டுக்கு ஒரு வாலிபர் வந்தார். அந்த வாலிபர், வீடு வாடகைக்கு வேண்டும் என்று லட்சுமிதேவியிடம் கூறினார். இதையடுத்து, தான் வாடகைக்கு விடும் வீட்டை வாலிபரிடம், லட்சுமிதேவி காட்டினார். அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று லட்சுமிதேவி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு அந்த வாலிபர் ஓடினார்.

உடனே லட்சுமிதேவி, சத்தம் போட்டு கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்தனர். பின்னர் தங்க சங்கிலி பறித்து சென்ற வாலிபரை பொதுமக்கள் விரட்டி சென்றனர். சிறிது தூரத்தில் வைத்து அந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம-அடி கொடுத்தார்கள். இதில், அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அந்த வாலிபரின் ஒரு கையும் முறிந்தது. தகவல் அறிந்ததும் பேடரஹள்ளி போலீசார் விரைந்து வந்து வாலிபரை மீட்டனர்.

மோட்டார் சைக்கிளுக்கான...

பின்னர் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தார்கள். உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் குட்டதஒசஹள்ளியை சேர்ந்த ஜெயந்த்(வயது 20) என்று தெரிந்தது. மேலும் அவர், மெக்கானிக்காக வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில், புதிதாக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஜெயந்த் விலைக்கு வாங்கியுள்ளார். சமீபத்தில் அந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உள்ளது.

கொரோனாவால் வேலை இல்லாததால், மோட்டார் சைக்கிளுக்கு மாதந்தோறும் கட்ட வேண்டிய தவணை தொகை செலுத்த முடியாததால் பெண்களிடம் தங்க சங்கிலி பறிக்க ஜெயந்த் முடிவு செய்துள்ளார். அதன்படி, லட்சுமிதேவியிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்றபோது பொதுமக்களிடம் சிக்கி இருந்தார். கைதான ஜெயந்த் மீது பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story