கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை


கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை
x
தினத்தந்தி 16 Oct 2020 10:00 PM GMT (Updated: 16 Oct 2020 10:00 PM GMT)

கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது நிவாரண உதவிகளை முழுவீச்சில் மேற்கொள்ளும்படி கலெக்டர்களுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டார்.

பெங்களூரு,

வட கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா, பாகல்கோட்டை, பெலகாவி, கொப்பல், பீதர், பல்லாரி, தாவணகெரே, உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை அதிகளவில் பெய்துள்ளது. இதில் கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு, பீமா ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர் மாவட்டங்களில் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஆற்று படுகையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளை இழந்தவர்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நேற்று பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் கலபுரகிக்கு சென்றார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேவையான உபகரணங்கள்

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா, பாகல்கோட்டை, பெலகாவி, கொப்பல், பீதர், பல்லாரி, தாவணகெரே, உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட 12 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள், தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் எடுத்துக் கூறினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண உதவிகளை முழுவீச்சில் மேற்கொள்ளும்படி கலெக்டர்களுக்கு, எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அவசரமாக ரூ.85.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் வசதிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செய்து கொடுத்துள்ளன. வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் தயாராக இருக்க வேண்டும். தங்களின் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மழை அளவு குறித்து தெளிவான புள்ளி விவரங்களை வழங்க வேண்டும்.

பலத்த மழை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து கடந்த 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கலபுரகி, பீதர், யாதகிரி, ராய்ச்சூர், பல்லாரி, பாகல்கோட்டை, தாவணகெரே, கொப்பல், தட்சிண கன்னடா, சிவமொக்கா, உடுப்பி, விஜயாப்புரா, பெலகாவி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் வட கர்நாடகத்தில் பீமா ஆற்றில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ள கிராம மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண முகாம்களில் கொரோனா பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். கால்நடைகளை பாதுகாக்க வேண்டும். அவைகளுக்கு உரிய தீவனம் வழங்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும்.

நிவாரண உதவிகள்

அந்த முகாம்களுக்கு டாக்டர்களை அனுப்பி வைத்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அந்த முகாம்களில் கொரோனா அறிகுறி இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்னை மற்றும் புனே ஆகிய நகரங்களில் இருந்து கூடுதலாக 12 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. உடுப்பி, தட்சிண கன்னடா, பாகல்கோட்டை, பல்லாரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 14 மீட்பு படகுகள் கலபுரகிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மீட்பு பணிகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் நம்பிக்கையை பெற்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நின்ற பிறகு பயிர் சேதம் குறித்து மதிப்பீடு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அரசு கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்கள் பாதிப்பு குறித்தும் கணக்கெடுக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். நிவாரண உதவிகள் வழங்கப்படுவதில் எந்த குழப்பமும் வரக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைப்பதை கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அலட்சியமாக செயல்படக்கூடாது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு கலெக்டர்கள் தைரியம் கூற வேண்டும். இதில் அதிகாரிகள் யாரும் அலட்சியமாக செயல்படக்கூடாது. அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் யாராவது அலட்சியமாக செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story