கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2020 11:26 PM GMT (Updated: 16 Oct 2020 11:26 PM GMT)

பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளியல் போடுகின்றனர். அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அம்மம்பள்ளி என்ற கிராமத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. இந்த அணை உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஆந்திர அதிகாரிகள் அணையை திறந்து தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் விடுகின்றனர்.

இவ்வாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. அப்போது பள்ளிப்பட்டு ஒன்றியத்திலுள்ள கீழ்க்கால்ப்பட்டடை, சாமந்தவாடா, நெடியம் ஆகிய கிராமங்களில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உள்ளது.

இதனால், மக்கள் நடந்து போக முடியாத அளவிற்கு தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆந்திர மாநில அதிகாரிகள் கிருஷ்ணாபுரம் அணை நீரை திறந்து விடும் போது தமிழக அதிகாரிகளுக்கு தகவல் தருகின்றனர்.

ஆபத்தை உணராமல்....

அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் திருத்தணி ஆர்.டி.ஓ. ஆகியோர் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுவதோடு, வெள்ளம் வருகிற போது யாரும் தரைப்பாலத்தை கடக்க வேண்டாம், வெள்ள நீரில் குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கின்றனர் ஆனால் ஆபத்தை உணராமலும், அதிகாரிகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆற்று வெள்ளத்தில் உற்சாக குளியல் போடுகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடியம் தரைப்பாலத்தை திருத்தணி ஆர்.டி.ஓ. நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது ஆற்று வெள்ளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிலரை பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். மேலும் பொதட்டூர்பேட்டை போலீசாரை வெள்ளம் வரும் சமயங்களில் அப்பகுதியில் கண்காணிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

எனவே அரசு அதிகாரிகள், போலீசார் கடும் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களை ஆற்று வெள்ளத்தில் குளிக்க விடாமல் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Next Story