கொடுமுடி, பவானி கூடுதுறையில் அமாவாசையையொட்டி திதி கொடுக்க தடையால் பக்தர்கள் ஏமாற்றம்


கொடுமுடி, பவானி கூடுதுறையில் அமாவாசையையொட்டி திதி கொடுக்க தடையால் பக்தர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 17 Oct 2020 5:41 AM IST (Updated: 17 Oct 2020 5:41 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி, பவானி கூடுதுறையில் அமாவாசையையொட்டி திதி கொடுக்க தடையால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஈரோடு,

கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கே ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து காவிரியில் புனித நீராடி காவிரிக்கரையில் தங்களது மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பார்கள். பின்னர் மகுடேஸ்வரர் வீரநாராயணப்பெருமாளை தரிசித்து விட்டு செல்வார்கள்.

அதேபோல் நேற்று அமாவாசையையொட்டி கொடுமுடிக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக காவிரிக்கரையில் பக்தர்கள் புனித நீராடவோ, பரிகாரம் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

பக்தர்கள் ஏமாற்றம்

பக்தர்கள் சிலர் கொடுமுடி அருகே பழைய சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள காவிரிக்கரையில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்தார்கள். கோவிலுக்குள் நுழையும் பக்தர்களை ஊழியர்கள் வெப்பநிலை அறியும் கருவியை கொண்டு சோதனை செய்த பின்னரே அனுமதித்தார்கள். முக கவசம் அணியாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகையையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தார்கள். கொடுமுடி கோவில் பகுதிக்குள் 4 சக்கர வாகனங்கள் வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர். இதனால் வெளியூரில் இருந்து 4 சக்கர வாகனங்களில் வந்திருந்த பக்தர்கள் பைபாஸ் ரோடு மற்றும் சாலையோரங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

பவானி கூடுதுறை

இதேபோல் பவானி கூடுதுறையிலும் திதி மற்றும் தர்ப்பணங்கள் செய்யவும், ஆற்றங்கரையோரம் குளிப்பதையும் மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. இதையொட்டி நேற்று பக்தர்கள் கூடுவதை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேலு மற்றும் ஏராளமான போலீசார் ஆற்றங்கரையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கூடுதுறைக்கு வந்த பக்தர்கள் ஏமற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story