திருப்பூரில் காதல் மனைவியை அடித்து துன்புறுத்திய தொழிலாளி கைது


திருப்பூரில் காதல் மனைவியை அடித்து துன்புறுத்திய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 17 Oct 2020 8:57 AM IST (Updated: 17 Oct 2020 8:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் காதல் மனைவியை அடித்து துன்புறுத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

திருப்பூர்,

திருப்பூர் திருமுருகன்பூண்டி அருகே ராக்கியாபாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் சங்கீதா (வயது 29). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அதே பனியன் நிறுவனத்தில் வேலை செய்த முரளிதரன் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு நண்பர்கள் முன்னிலையில் கேரள மாநிலம் குருவாயூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. திருமணம் முடிந்து இருவரும் ராக்கியாபாளையத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் முரளிதரனின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சங்கீதா திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது 7 பவுன் நகையை வாங்கி தனது கணவர் முரளிதரன் அவருடைய கடன்களை அடைத்து விட்டதாகவும், மேலும் ரூ. 4 லட்சத்து 20 ஆயிரத்தை முரளிதரனுக்கு கொடுத்ததாகவும் தனது கணவருக்காக இவ்வளவு செய்த நிலையில் கணவரின் பெற்றோர் அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று எனது கணவரின் தந்தை, தாய், மைத்துனர் ஆகியோர் எனது வீட்டுக்கு வந்து தகாத வார்த்தையில் திட்டினார்கள். எனது கணவரும், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னை காலால் எட்டி உதைத்து நடுரோட்டில் வைத்து அவமானப்படுத்தி அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். மேலும் கொன்று விடுவதாக மிரட்டினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

புகாரை பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி, பொது இடத்தில் பெண்ணை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்காக முரளிதரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story