தூக்கில் பிணமாக தொங்கிய சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் - புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு பரபரப்பு


தூக்கில் பிணமாக தொங்கிய சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் - புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு பரபரப்பு
x
தினத்தந்தி 17 Oct 2020 4:21 AM GMT (Updated: 17 Oct 2020 4:21 AM GMT)

தூக்கில் பிணமாக தொங்கிய சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கும்மங்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசனின் மகள் அபிநயா(வயது 15). எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த அபிநயா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அபிநயாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி சிறுமியின் உடலை பெறுவதற்காக உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டு இருந்தனர். அப்போது அவர்கள், சிறுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்திருக்கலாம் எனவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இறந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும்பொருட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில், போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதனை ஏற்று, சாலை மறியலை கைவிட்டு சிறுமியின் உடலை பெற்றுச்சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை முன்பு நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

அபிநயா தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், இந்த வழக்கில் சிறுமி தற்கொலை செய்தது பிரேத பரிசோதனையில் உறுதியானது. வேறெதும் உடலில் காயங்கள் இல்லை. அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்கொலை வழக்காக ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் விசாரணை அதிகாரியாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்“ என்றனர்.

Next Story