தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் பெண்ணிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது


தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் பெண்ணிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2020 10:15 AM IST (Updated: 17 Oct 2020 10:15 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் பெண்ணிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேனம்மை ஊருணி மேல்கரை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன். அவருடைய மனைவி சிட்டு (வயது 50). இவரது வீட்டின் அருகே உள்ள காலி இடத்திற்கு வரிவிதிப்பு செய்வதற்காக தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், நகராட்சி வருவாய் ஆய்வாளர் வேலுச்சாமி வரி விதிக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிட்டு வருவாய் ஆய்வாளர் வேலுச்சாமியை சந்தித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் தனக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் தந்தால்தான் வரிவிதிப்பு செய்வேன் என கூறினாராம்.

இதுதொடர்பாக சிட்டு, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமன்னன் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளரிடம் சிட்டு நேற்று கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த துணை சூப்பிரண்டு மணிமன்னன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், குமரவேல், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது மற்றும் போலீசார் விரைந்து வந்து வருவாய் ஆய்வாளர் வேலுச்சாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் தேவகோட்டை செல்வபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அதன்பின் வேலுச்சாமியை, சிவகங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Next Story