மாவட்ட செய்திகள்

மின்சாரம் பாய்ச்சி பெண் கொலை: அண்ணன்-தம்பிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு + "||" + Woman killed by electric watering To brother-in-law Double life sentence Krishnagiri Court Judgment

மின்சாரம் பாய்ச்சி பெண் கொலை: அண்ணன்-தம்பிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

மின்சாரம் பாய்ச்சி பெண் கொலை: அண்ணன்-தம்பிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
சிங்காரப்பேட்டை அருகே பெண்ணை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த வழக்கில், அண்ணன்-தம்பிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது 49). இவர்களுக்கு சொந்தமான நிலம் நெடுஞ்சாலை பணிக்காக கையகப்படுத்தப்பட்டது. அதற்கான இழப்பீடு தொகை அரசால் வழங்க இருந்தது. இந்த தொகையை தங்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்று, சேட்டுவின் சகோதரியான நாயக்கனூரைச் சேர்ந்த காசியம்மாள் (50) உரிமை கோரினார். ஆனால் மாவட்ட நிர்வாகம் இழப்பீட்டு தொகையை ஜெயக்கொடிக்கு வழங்கியது.


இந்த நிலையில் கடந்த 20.4.2013 அன்று ஜெயக்கொடி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் ஜெயக்கொடி மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் ஜெயக்கொடியை ஆத்திரத்தில் காசியம்மாள், அவரது கணவர் குமரேசன் (60), மகன்கள் கணேசன் (30), ஆறுமுகம் (28) ஆகியோர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததாக அவரது சகோதரர் கோவிந்தராஜ் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இது தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காசியம்மாள் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அவர்கள் 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர். அங்கு இந்த வழக்கில் இருந்து காசியம்மாள், அவரது கணவர் குமரேசன் ஆகிய இருவரையும் ஐகோர்ட்டு விடுவித்தது. மீதமுள்ள அண்ணன், தம்பிகளான கணேசன், ஆறுமுகம் மீதான வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி ஜெயக்கொடியை கொலை செய்த குற்றத்திற்காக கணேசன், ஆறுமுகத்திற்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.