சிவகளையில், அகழாய்வு நடைபெற்ற குழிகளை மூடும் பணி தொடக்கம்
சிவகளையில் அகழாய்வு நடைபெற்ற குழிகளை மூடும் பணி நேற்று தொடங்கியது.
ஏரல்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பரும்பு பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த மே மாதம் 25-ந் தேதி தொடங்கியது. இந்த பணியானது தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொடங்கப்பட்டது. இதில் அகழாய்வுகள் அதிகாரிகள் பிரபாகர், தங்கத்துரை ஆகியோர் தலைமையில் தொல்லியல் துறை ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பணியாளர்கள் என 50 பேர் ஈடுபட்டு வந்தனர். மேலும் சிவகளை பரும்பு பகுதியில் இருந்து தென்புறம் உள்ள வலப்பான்பிள்ளை பகுதியில் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியை கண்டறிய ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. இதில் 30 பணியாளர்கள் ஈடுபட்டு வந்தன. பரும்பு பகுதியில் 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் இருந்து சிறிய, சிறிய, கிண்ணங்கள், நெல்மணிகள், அரிசி, மனிதனை எரித்து வைத்த சாம்பல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் முதுமக்கள் தாழிகளில் இருந்து மனித தாடை எலும்புடன் கூடிய பற்கள், முதுகெலும்புகள் உள்பட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் 45-க்கும் மேற்பட்ட கிண்ணங்கள் மூடிகள் 20-க்கும் மேற்பட்ட இரும்பினாலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டு அதிகாரிகள் வைத்துள்ளனர். மக்கள் வாழ்விடமான பகுதிகளில் நடந்த பணியில் கற்கருவிகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், பானை ஓடுகள், சுடுமண்ணால் ஆன உருவங்கள், செப்புக்காசு, சங்கு வளையல் துண்டுகள் உள்ளிட்ட 70-க்கு மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை நேற்று அகழாய்வு அதிகாரிகள் பிரபாகரன், தங்கத்துரை ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் மூடும் பணி நேற்று தொடங்கியது. அகழாய்வு பணியில் கிடைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story