பெண் குரலில் பேசி கடை உரிமையாளர்களிடம் நூதன மோசடி செய்தவர் கைது
பெண் குரலில் பேசி கடை உரிமையாளர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியில் உள்ள கடைகளுக்கு பெண் ஒருவர் போன் செய்து பொருட்களுடன், பணத்தையும் அபேஸ் செய்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நாலச்சோப்ராவை சேர்ந்த மணிஷ் அம்பேகர் (வயது40) என்பவர் தான் பெண் குரலில் பேசி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
பிடிபட்ட மணிஷ் அம்பேகர் சாதரணமாக பெண் குரலில் பேசுவது வழக்கம்.
இதனை பயன்படுத்திய அவர் கடைகள், நகைக்கடை, மருந்து கடை, மொத்த வியாபார கடை ஆகிய இடங்களுக்கு சென்று செல்போன் நம்பரை பெற்று செல்வார்.
பின்னர் அந்த நம்பரில் தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசி பொருட்களை ஆர்டர் செய்வார். பின்னர் ரூ.2 ஆயிரத்திற்கு மீதி சில்லறை கொடுத்து அனுப்பிவிடும்படி தெரிவிப்பார். இதனை நம்பிய கடை உரிமையாளர்கள் வேலை பார்க்கும் ஊழியரிடம் ரூ.2 ஆயிரம் நோட்டை அப்பெண்ணிடம் பெற்று வருவதற்காக மீதி சில்லறை நோட்டுகள் மற்றும் பொருட்களுடன் அனுப்பி வைப்பார்.
அப்போது குறிப்பிட்ட கட்டிடத்தின் வெளியே மணிஷ் அம்பேகர் நின்று கொண்டு அங்கு வரும் ஊழியரிடம் ஆர்டர் தெரிவித்த பெண் அனுப்பியதாக கூறி மீதி பணத்தையும், பொருட்களையும் பெற்று கொண்டு ரூ.2 ஆயிரம் பணநோட்டுடன் வருவதாக கூறி அங்கு நிற்கும் படி தெரிவிப்பார். இதனால் கடை ஊழியர் எதிர்பார்த்து நின்ற சமயத்தில் கட்டிடத்தின் மற்றொரு வழியாக பணம், பொருட்களுடன் தலைமறைவாகி விடுவது வழக்கமாக கொண்டிருந்தார். இவர் இதே பாணியில் தானே, பால்கர், மும்பை, நாசிக், மற்றும் புனே மாவட்டங்களில் தனது கைவரிசையை காட்டி வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவரிடம் இருந்து மோசடி செய்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story