அனகாபுத்தூரில் 2 பேரை கத்தியால் வெட்டிய கும்பல் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்


அனகாபுத்தூரில் 2 பேரை கத்தியால் வெட்டிய கும்பல் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
x

அனகாபுத்தூரில் 2 பேரை கத்தியால் வெட்டிய மர்மகும்பலை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த அனகாபுத்தூர், பாரி நகரைச் சேர்ந்தவர் கோகுல்(வயது 22). இவர், தனியார் வங்கி ஊழியர் ஆவார். கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம்(27). லாரி டிரைவர். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இரவு அனகாபுத்தூர் காமாட்சி நகர் மெயின்ரோடு வழியாக சோமசுந்தரம் நடந்து சென்றார். அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்தது.

சோமசுந்தரத்தின் அலறல் சத்தம் கேட்டு அவருக்கு உதவுவதற்காக கோகுல் அங்கு சென்றார். அப்போது மர்ம நபர்கள் கோகுல், சோமசுந்தரம் இருவரையும் கத்தியால் வெட்டினர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மர்ம கும்பலை பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சங்கர்நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயம் அடைந்த கோகுல், சோமசுந்தரத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கோகுலுக்கு தலையில் 3 தையல்கள் போடப்பட்டன. சோமசுந்தரத்திற்கு 4 இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது.

அதேபோல் பொதுமக்கள் தாக்கியதில் அனகாபுத்தூர், பக்தவச்சலம் தெருவை சேர்ந்த அகமது பாஷா(22), அஜய்(19) ஆகிய இவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அகமதுபாஷா, அஜய் இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

Next Story