உடல் நலத்தை காக்க ‘பொதுமக்கள் தரமான உணவை சாப்பிட வேண்டும்’ கலெக்டர் ஷில்பா பேச்சு


உடல் நலத்தை காக்க ‘பொதுமக்கள் தரமான உணவை சாப்பிட வேண்டும்’ கலெக்டர் ஷில்பா பேச்சு
x
தினத்தந்தி 17 Oct 2020 10:15 PM GMT (Updated: 18 Oct 2020 12:27 AM GMT)

உடல்நலத்தை காக்க பொதுமக்கள் தரமான உணவை சாப்பிட வேண்டும் என்று நெல்லையில் நடந்த உலக உணவு தினவிழாவில் கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக உணவு தின விழா நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். மேலும் சரிவிகித உணவு மற்றும் கலப்பட உணவு பற்றிய விழிப்புணர்வு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

விழாவில் கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் உலக உணவு தினமாக கொண்டாடி வருகிறோம். உணவு பாதுகாப்பு ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதே இந்த வருடத்தில் ஆய்வு பொருள். உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐக்கிய நாட்டு சபை, உலக சுகாதார அமைப்பு, உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்கின்றன.

பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை பெறுவதே உறுதியான வாழ்க்கைக்கும் நல்ல சுகாதாரத்திற்கும் திறவுகோலாக அமையும். உணவின் மூலம் வரக்கூடிய நோய்கள், சமூக பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன.

ஒரு ஆண்டில் சுகாதாரமற்ற உணவினால் ஏற்படும் நோயின் மூலம் 600 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் ஒரு ஆண்டில் 1 லட்சத்து 25 ஆயிரம் குழந்தைகள் இறந்து போகிறார்கள். உணவு பாதுகாப்பை அடைவது என்பது அரசாங்கம், உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் என அனைவருக்கும் பொறுப்புள்ளது. உடல் நலத்தை காப்பதற்கு தரமான உணவை சாப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ஜெயசூர்யா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், டைட்டஸ், கிருஷ்ணன், சங்கரநாராயணன், செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story