வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகள் - கலெக்டர் பிரவீன்நாயர் ஆய்வு
வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் ரூ.100 கோடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகளை கலெக்டர் பிரவீன்நாயர் ஆய்வு செய்தார்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மீன்பிடித்தொழிலில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் நாகப்பட்டினம் மாவட்டமும் ஒன்றாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் முக்கிய தொழிலாக இருப்பதுடன் வேலைவாய்ப்பு மற்றும் அதிக வருவாயும் தருகிறது. நுகர்வோருக்கு சிறந்த உணவு பொருளாக இருப்பதுடன் இதனை சேர்ந்த பல உபதொழில்கள் உருவாகவும் இந்த மீன்பிடி தொழில் மிக முக்கிய காரணியாக திகழ்கிறது.
வெள்ளப்பள்ளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் 9,176 பேர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மீனவர்களுக்கு சொந்தமாக 490 நாரிழை படகுகள் மற்றும் 80 கட்டுமரங்கள் ஆகியவை மீன்பிடி தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்களை இறக்கி சுகாதாரமான முறையில் சந்தைப்படுத்துவதற்கும், வலைகளை பின்னுவதற்கும் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது,
இப்பகுதி மீனவ மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த மீன்பிடி துறைமுகத்தில் தெற்குபுறத்தில் 1300 மீட்டர் நீளத்திற்கும், வடக்குப்புறத்தில் 1080 மீட்டர் நீளத்திற்கும் அலைத்தடுப்பு சுவரும், 240 மீட்டர் நீளமுள்ள படகு அணையும், 2 மீன் ஏலக்கூடங்களும், 2 வலை பின்னும் கூடங்களும், 1 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், 1 அலுவலக கட்டிடம் மற்றும் தகவல் தொடர்பு கோபுரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைய உள்ளது.
இந்த புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நிறைவுற்று, பயன்பாட்டுக்கு வரும் போது, இப்பகுதியை சுற்றியுள்ள காமேஸ்வரம், விழுந்தமாவடி, வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, புஷ்பவனம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது உதவி கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, செயற்பொறியாளர்(மீன்வளத்துறை) முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வேதாரண்யம் தாசில்தார் முருகு உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story