நவராத்திரி விழா தொடங்கியது: கோவில்களில் கொலு வைத்து வழிபாடு


நவராத்திரி விழா தொடங்கியது: கோவில்களில் கொலு வைத்து வழிபாடு
x
தினத்தந்தி 18 Oct 2020 5:30 PM IST (Updated: 18 Oct 2020 5:20 PM IST)
t-max-icont-min-icon

நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி கோவில்களில் கொலு வைத்து வழிபாடு தொடங்கியது.

புதுக்கோட்டை,

நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி புதுக்கோட்டையில் உள்ள கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு தொடங்கியது. கீழராஜ வீதியில் மனோன்மணி அம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், விழாவின் முதல் நாளான நேற்று கொலு பொம்மை அருகே மாகேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் மனோன்மணி அம்மன் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதேபோல திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு தொடங்கின. கீழ 3-ம் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இதேபோல நகரில் உள்ள பல்வேறு கோவில்களிலும் விழா தொடங்கியது.

வருகிற 25-ந் தேதி சரஸ்வதி பூஜையாகும். 26-ந் தேதி விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவையொட்டி வீடுகளிலும் பலர் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு தொடங்கி உள்ளனர்.

பொன்னமராவதியில் உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில், சிவன் கோவில், நகர சிவன் கோவில், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோவில், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா நடைபெற்றது. கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பொன்புதுப்பட்டி நகர சிவன் கோவிலில் மீனாட்சி அலங்காரமும், சோழீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் மாரியம்மன் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகளுக்கு முககவசம் அணிவிக்கப்பட்டிருந்தது.

Next Story