அழகானந்தல், வெறையூர் பெரிய ஏரிகளில் குடிமராமத்து பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
தமிழக முதல்- அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் ரூ.31 கோடியே 20 லட்சம் மதிப்பில் 59 ஏரிகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மத்திய பெண்ணை ஆறு வடிநில கோட்டம் மூலமாக 54 ஏரிகள் ரூ.28 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டிலும், காஞ்சீபுரம் கீழ்பாலாறு வடிநில கோட்டம் மூலமாக வெம்பாக்கம் தாலுகாவில் 5 ஏரிகள் ரூ.2 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் திருவண்ணாமலை தாலுகா அழகானந்தல் மற்றும் வெறையூர் பெரிய ஏரிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை அரசு முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டார். மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், விவசாயம் செழிப்பதற்கும், தண்ணீர் தேவை நிவர்த்தி அடைவதற்கும் குடிமராமத்து பணிகளில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) அஜீதாபேகம், பொதுப் பணித்துறை அலுவலர்கள், பாசன சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story