ஆசை வார்த்தைகளை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்தி 2-வது திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
குடியாத்தத்தில் ஆசை வார்த்தைகளை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம்,
ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் கணேஷ் (வயது 28). இவர், குடியாத்தத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பிச்சனூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியை ஆசை வார்த்தைகளை கூறி, 9-ந்தேதி கடத்தி சென்றதாக, மாணவியின் பெற்றோர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை கணேஷ், மாணவியோடு குடியாத்தம் பகுதிக்கு வர இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா, சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டு ராமு ஆகியோர் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் வந்து கண்காணித்தனர்.
அப்போது ஒரு பஸ்சில் இருந்து கீழே இறங்கிய கணேஷ், உடன் வந்த மாணவியை போலீசார் விரைந்து சென்று பிடித்தனர். அவர்களை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். கணேஷ், மாணவியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று திருவண்ணாமலையில் வைத்து கட்டாயத் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்துக்குப் பின் சென்னை புறநகர் சோழிங்கநல்லூர் பகுதியில் தங்கி இருந்ததாகவும், கையிலிருந்த பணம் தீர்ந்து போனதால் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி செல்ல குடியாத்தம் வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து கணேசை, போக்கோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story