இயற்கை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
இயற்கை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. எனினும் ஆன்லைன் மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆன்லைன் மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அதன்படி கிடைத்த விவரப்படி கூட்டத்தில் 11 கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டில் கூடலூர் தாலுகாவில் 70 ஹெக்டருக்கு பாகற்காய் விதைக்கு ஊக்கத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. பாகற்காய் விதை தேவைப்படும் விவசாயிகள் கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனரை நேரில் அணுகி ஆவணங்களை சமர்ப்பித்து பெற்று கொள்ளலாம். துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு குழாய், பம்புசெட், நீர் சேகரிப்பு குட்டை, கிணறு அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்தின் மூலம் பரப்பு விரிவாக்கத்தின் கீழ் உயர்ரக காய்கறி சாகுபடி செய்ய பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தோட்டக்கலை துறையின் மூலம் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான அனைத்து விவரங்கள் www.nilgiris.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. எனவே விவசாயிகள் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், விவரங்களை தெரிந்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story