தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 19 Oct 2020 1:18 AM IST (Updated: 19 Oct 2020 1:18 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.3 கோடிக்கும் மேல் செயல்படுத்தப்படும் புதிய சாலைகள் அமைக்க பூமி பூஜை மற்றும் திறப்பு விழா நடந்தது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, சாலைகளுக்கு பூமி பூஜை நடத்தி, புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை திறந்து வைத்தார். பின்னர் கொளப்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 93 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாட்டுக் கடன் உதவியை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக நியாய விலை கடைகளில் பயோ மெட்ரிக் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் வந்தது. தற்போது தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர் தான் முதலிடம் பெற்றுள்ளார். 12 ஆண்டு காலத்துக்கு பிறகு மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் இருந்து தான் நீட் தேர்வில் 180 கேள்விகளில் 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாது

அதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அத்திக்கடவு-அவினாசி திட்டம் மூலம் கொளப்பலூர் பகுதி ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க முதல்-அமைச்சர் சட்டம் இயற்றியுள்ளார். பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை. மேலும் பள்ளிகள் திறப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. தமிழக அரசு சார்பில், இ-பாக்ஸ் நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே அரசு இலவச பயிற்சி அளிக்கும். 2-ம் முறை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தனியார் மூலம் பயிற்சி பெற்று தான் தேர்வு எழுத வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பேட்டியின் போது பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், தாசில்தார் தியாகராஜ் உள்பட பலர் அமைச்சருடன் இருந்தனர்.

Next Story