கட்சிரோலியில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை


கட்சிரோலியில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 18 Oct 2020 9:02 PM GMT (Updated: 18 Oct 2020 9:02 PM GMT)

கட்சிரோலியில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

மும்பை,

மராட்டியத்தில் கட்சிரோலி மாவட்டம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். எனவே அங்கு நக்சலைட்டுகளை ஒழிக்க மாநில அரசு சிறப்பு கமாண்டோ படையை அமைத்து உள்ளது. இந்த படையினர் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, அவர்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று கட்சிரோலி மாவட்டம் தனோரா தாலுகாவில் உள்ள கோஸ்மி- கிஸ்னெலி வனப்பகுதியில் அதிகளவில் நக்சலைட்டுகள் திரள உள்ளதாக கமாண்டோ படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.ஐ.ஜி. சந்தீப் பாட்டீல் தலைமையிலான கமாண்டோ படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது, மாலை 4 மணி அளவில் வனப்பகுதியில் மறைந்திருந்த நக்சலைட்டுகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் எதிர்தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டை சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.

5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

இதில், போலீசாரின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் நக்சலைட்டுகள் அடா்ந்த காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சண்டை நடந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, 5 நக்சலைட்டுகள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தனர். போலீசார் அவர்களது உடல்களை மீட்டு விமானம் மூலம் கட்சிரோலி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர்.

துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்ட 5 நக்சலைட்டுகளின் அடையாளம் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். கட்சிரோலியில், போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் கட்சிரோலியில் 20-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story