மாவட்ட செய்திகள்

வடகர்நாடகத்தில் 111 கிராமங்கள் நீரில் தத்தளிப்பு மீட்பு பணியில் ராணுவம் தீவிரம் 20 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு + "||" + Army intensifies rescue operation in 111 villages in Vadakarnataka 20 thousand people are staying in camps

வடகர்நாடகத்தில் 111 கிராமங்கள் நீரில் தத்தளிப்பு மீட்பு பணியில் ராணுவம் தீவிரம் 20 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு

வடகர்நாடகத்தில் 111 கிராமங்கள் நீரில் தத்தளிப்பு மீட்பு பணியில் ராணுவம் தீவிரம் 20 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு
வடகர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பீமா, கிருஷ்ணா ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் 111 கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 20 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு,

வடகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை புரட்டியெடுத்து வருகிறது. கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக கிருஷ்ணா, பீமா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த ஆறுகளின் படுகைகளில் அமைந்துள்ள கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்று அங்கு தங்கியுள்ள மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


இதைதொடர்ந்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், கடந்த வாரம் கலபுரகி, யாதகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். ஆயினும் அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று விமர்சனம் எழுந்தது. கலபுரகி மாவட்ட பொறுப்பு மந்திரியான துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், கொரோனா பாதிப்பு காரணமாக வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 12 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளும்படி உத்தரவிட்டிருந்தார்.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

இதற்கிடையே தொடர் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் விஜயாப்புராவில் உள்ள அலமட்டி (அணையின் நீர்மட்ட உயரம்-519 மீட்டர்), யாதகிரி மாவட்டத்தில் உள்ள நாராயணபுரா (492 மீட்டர்)அணைகள் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று காலை நிலவரப்படி அலமட்டி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 871 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 749 கனஅடியாகவும் இருந்தது. அதுபோல் நாராயணபுரா அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 336 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 312 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் 3 லட்சத்து 12 ஆயிரத்து 61 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்

இரு அணைகளில் இருந்தும் அதிகளவு நீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் கிருஷ்ணா, பீமா, மல்லபிரபா, கட்டப்பிரபா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா ஆகிய 4 மாவட்டங்களில் ஆற்றங்கரையை ஒட்டிய 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முதல் இவர்களுடன் சேர்ந்து ராணுவத்தினரும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மழை-வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பேரிடர் மேலாண்மை ஆணைய கமிஷனர் மனோஜ் ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய 20 ஆயிரத்து 269 மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டு உள்ளனர். இதில் கலபுரகியில் மட்டும் 15 ஆயிரத்து 78 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். வடகர்நாடகத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ராணுவத்தின் உதவியுடன் மீட்டு வருகிறோம்.

தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள்

ராணுவத்தினருடன் இணைந்து என்.டி.ஆர்.எப்., எஸ்.டி.ஆர்.எப்., மாவட்ட போலீசாரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மராட்டியத்தில் உள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் 4 மாவட்டங்களிலும் 111 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மீட்பு பணியில் 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்., ஒரு மாநில பேரிடர் மீட்பு குழுவினர், ஒரு ராணுவ குழு ஈடுபட்டு உள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் தனித்தனி குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கலபுரகியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் உயிர் இழப்புகள் எதுவும் இல்லை. விஜயாப்புராவில் மட்டும் 2 மாடுகள் செத்துள்ளன.

கலபுரகியில் 6 தாலுகாக்களில் 55 கிராமங்களும், யாதகிரியில் 3 தாலுகாக்களில் 13 கிராமங்களும், விஜயாப்புராவில் 26 கிராமங்களும் வெள்ளத்தால் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளன. கலபுரகியில் 157 கிராமங்களையும், யாதகிரியில் 45 கிராமங்களையும், யாதகிரியில் 26 கிராமங்களையும் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாக நாங்கள் ஏற்கனவே குறித்து வைத்து உள்ளோம். அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எடியூரப்பா 21-ந்தேதி நேரில் ஆய்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எந்த உதவியும் செய்யாமல் அந்த பகுதிகளை மாநில அரசு கைவிட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன. இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 21-ந் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார். இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதை அடுத்து வட கர்நாடகத்தில் பலத்த மழை பெய்துள்ளது. மேலும் மராட்டியத்தில் இருந்து கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர் மற்றும் விஜயாப்புரா ஆகிய மாவட்டங்களில் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சில கிராமங்கள் பாதி அளவுக்கு தண்ணீரில் மிதக்கின்றன என்று எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களின் உண்மை நிலையை அறிந்துகொள்ளும் வண்ணம் முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 21-ந் தேதி வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்வார். கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர் மற்றும் விஜயாப்புரா ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வெள்ள சேதங்களை நேரில் பார்வையிடுவார். ஹெலிகாப்டர் மூலம் சேதங்களை பார்வையிட உள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நிவர் புயலால் கனமழை: வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை
சென்னையில் விட்டு விட்டு பெய்த கனமழை காரணமாக நகரத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது.
2. தூத்துக்குடியில் தொடரும் கனமழை உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
தூத்துக்குடி பகுதியில் பெய்த வரும் தொடர்கனமழை காரணமாக உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோரம்பள்ளம் குளம் நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
3. நெல்லையில் விடிய, விடிய மழை: 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
நெல்லையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, விருதுநகர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தெலுங்கானாவில் கனமழை; வீடு இடிந்ததில் 5 பேர் பலி
தெலுங்கானாவில் கனமழைக்கு வீடு இடிந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர்.