சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி கலெக்டர் ஷில்பா தகவல்


சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 19 Oct 2020 4:21 AM IST (Updated: 19 Oct 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

நெல்லை,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் போலீஸ் துறையில் 11,741 இரண்டாம்நிலை போலீசார், சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்போர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 13-ந்தேதி இதற்கான தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 26 வயது வரையிலும், ஆதி திராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், திருநங்கைகள் 29 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகள் 35 வயது வரையிலும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் துணை ராணுவ படையினர் 45 வயது வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, உடல்திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பம் செய்வோர் www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 26-ஆம் தேதி ஆகும். இதே முகவரியில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இலவச பயிற்சி

இந்த தேர்வை எதிர்கொள்வதற்கான இணையதள இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 9-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாதிரி தேர்வுகள் ஒவ்வொரு புதன்கிழமையும் இணையதளம் மூலமாக நடத்தப்படும். இந்த இணையதள பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தங்கள் செல்போனில் Telegram செயலியை பதிவிறக்கம் செய்யவும். பின்னர் Nellai employment Office என type செய்தால் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மைய Telegram channel தோன்றும். அதை தேர்வு செய்து join என்பதை click செய்து இணைந்து கொள்ளலாம், password எதுவும் தேவை இல்லை.

இந்த சேனலில் பயிற்சியில் சேருவதற்காக கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து சப்மிட் செய்து பயிற்சி வகுப்பில் சேரலாம். மேலும் மாணவர்கள் தங்களது செல்போனில் zoom செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் நெல்லை வேலைவாய்ப்பு அலுவலக டெலிகிராம் சேனலில் வரும் லிங்கை பயன்படுத்தி மாணவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story