அவினாசி அருகே கார்- வேன் மோதல்; பெண் பரிதாப சாவு 13 பேர் காயம்


அவினாசி அருகே கார்- வேன் மோதல்; பெண் பரிதாப சாவு 13 பேர் காயம்
x
தினத்தந்தி 19 Oct 2020 2:58 AM GMT (Updated: 19 Oct 2020 2:58 AM GMT)

அவினாசி அருகே காரும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். சிறுவர்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

அவினாசி,

திருப்பூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் ராமலிங்கம் (வயது 24). இவர் கணக்கம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று தனது தந்தை குப்புசாமி (66), தாயார் பத்மாவதி (63), அண்ணன் நாராயண லிங்கேஸ்குமார் (26) மற்றும் தனது உறவினர் வீரேஸ்வரி (52) ஆகியோருடன் காரில் அன்னூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் அனைவரம் திருப்பூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை நாராயண லிங்கேஸ்குமார் ஓட்டி வந்தார். அவினாசியை அடுத்த நரியம்பள்ளிபுதூர் அருகே அவர்கள் கார் வந்த போது திருப்பூரிலிருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற வேனும் இவர்கள் காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பத்மாவதி, குப்புசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுபோல் வீரேஸ்வரி, ராமலிங்கம், நாராயண லிங்கேஸ்குமார் ஆகியோரும் காயம் அடைந்தனர். இதுபோல் வேனை ஒட்டி வந்த அபுதாகிர் (36), அதில் பயணம் செய்த சகீரா (60), வஜீகா (12), சபினா (9), தஸ்பீணா (6), தைகா (13), ரிஷ்வாணா (35), சிராஜ் நிஷா(31), ஹேம்டஹாணா (11) ஆகிய 9 பேருக்கும் காயம் ஏற்பட்டது. விபத்தில் கார், வேன் சேதம் அடைந்தது. இந்த விபத்து காரணமாக அவினாசி - அன்னூர் சாலையில் நரியம்பள்ளிபுதூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் காரில் வந்த 5 பேரை அன்னூர் அரசு மருத்துவமனைக்கும், வேனில் வந்த 9 பேரையும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் காரில் வந்த பத்மாவதி சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றும் காரில் பயணம் செய்த மற்றவர்கள் அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த பத்மாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story