கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்துள்ள நெல், மழையில் நனைந்தது விவசாயிகள் கவலை


கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்துள்ள நெல், மழையில் நனைந்தது விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 19 Oct 2020 9:41 AM IST (Updated: 19 Oct 2020 9:41 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பகுதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்துள்ள நெல், மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் 58 ஆயிரத்து 948 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 48 ஆயிரத்திற்கு மேற்பட்ட எக்டேரில் அறுவடை பணி முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டு இலக்கை மிஞ்சி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதுடன் விளைச்சலும் அதிகம். அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக தஞ்சை மாவட்டத்தில் 268 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்றதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவியல், குவியலாக கொட்டி வைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 1,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வழக்கமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும். அப்படி கொண்டு செல்லப்பட்டால் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க இடவசதி ஏற்படும். ஆனால் தற்போது கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சில கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க இடவசதி உள்ளது. ஆனால் பல நிலையங்களில் போதிய இடவசதி இல்லை. இதனால் நிலைய கட்டிடத்திற்குள்ளும், நிலைய வளாகத்தில் திறந்தவெளியிலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கொள்முதல் நிலையங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை, கொள்முதல் நிலைய பணியாளர்களால் உடனடியாக கொள்முதல் செய்ய முடியவில்லை. இருப்பு வைக்க போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் தினமும் 1,000 மூட்டைகள் என்பதற்கு பதிலாக 300 முதல் 350 மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்தின் முன்பும் ஏராளமான விவசாயிகள் நெல்லை குவியல் குவியலாக கொட்டி வைத்து 20 முதல் 25 நாட்களாக இரவு, பகலாக காத்திருக்கக்கூடிய பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் கரந்தை, அருள்மொழிப்பேட்டை, கோவிலூர், களிமேடு, கொல்லாங்கரை உள்ளிட்ட பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்துள்ள நெல்மணிகள் நனைந்துவிட்டன. தார்பாய்களை கொண்டு நெல்லை மூடி வைத்திருந்தாலும் மழை தண்ணீர் நுழைந்து நெல்மணிகள் நனைந்தன. பாடுபட்டு நெற்பயிரை வளர்த்து மிகவும் சிரமத்திற்கு மத்தியில் அறுவடை செய்து கொண்டு வந்த நெல் நனைந்ததை பார்த்து விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர்.

நேற்றுகாலையில் மழை பெய்யாததால் மழையில் நனைந்த நெல்லை, சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால் பிற்பகலில் கனமழை பெய்ததால் அவசர, அவசரமாக சாலையில் கொட்டிய நெல்லை அள்ளி குவித்து வைத்து தார்பாயை கொண்டு மூடினர். தொடர்ந்து மழை பெய்தால் நெல்மணிகள் நனைந்து முளைத்து வீணாகிவிடும் நிலை உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இன்று(நேற்று) விடுமுறை விட்டுவிட்டனர். மழை தொடர்ந்து பெய்வதால் நனைந்த நெல்லை காய வைக்க முடியாத நிலை உள்ளது. நெல் அதிகஅளவில் குவிந்து கிடப்பதால் ஈரப்பதத்தை தளர்த்தி அனைத்து நெல்லையும் விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் நனைந்தன
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அனைத்தும் 48 மணிநேரத்திற்குள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற விதிமுறை கடைபிடிக்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலையத்திலேயே தேங்கி கிடக்கின்றன. கரந்தை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்துவிட்டன.

இதேபோல் பல கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்துவிட்டன. மழையினால் ஏற்படும் இழப்புகள் நிலைய பணியாளர்கள் மீது சுமத்தப்படுகிறது. இதனால் பணியாளர்களும் அச்சத்துடன் இருக்கின்றனர். தொடர் மழை பெய்வதால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் தேங்காத அளவுக்கு உடனுக்குடன் கொண்டு செல்ல வேண்டும் என்பது நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களின் கோரிக்கையாகும்.

Next Story