அறந்தாங்கியில் மூடிக்கிடக்கும் வாரச்சந்தையை திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


அறந்தாங்கியில் மூடிக்கிடக்கும் வாரச்சந்தையை திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Oct 2020 10:58 AM IST (Updated: 19 Oct 2020 10:58 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கியில் மூடிக்கிடக்கும் வாரச்சந்தையை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளன. அறந்தாங்கியை சுற்றி 300 கிராமங்கள் உள்ளது. இந்த கிராம பகுதிகளில் அனைத்து விதமான விவசாய பொருட்களையும் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த விவசாய பொருட்களை வியாபாரிகளிடம் கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். வியாபாரிகள் அனைவரும் அறந்தாங்கி பேராவூரணி சாலையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை செயல்படும் வாரச்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.

இதேபோல் அனைத்து வியாபாரிகளும் அவர் அவர் வியாபாரம் செய்யும் பொருட்களை கொள்முதல் செய்து சந்தையில் விற்பனை செய்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் வருமானம் கிடைத்தது. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

வாரச்சந்தையால் அறந்தாங்கியில் பணபுழக்கம் அதிகமாக இருந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட செவ்வாய் வாரச்சந்தை 7 மாதம் ஆகியும், இன்று வரை சந்தை திறக்கப்பட வில்லை. இதனால் விவசாயிகள், வர்த்தகர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட தலைநகர் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வாரச்சந்தை தற்போது செயல்பட்டு வருகிறது.

அறந்தாங்கி வாரச்சந்தை மட்டும் மூடிக்கிடக்கிறது. அறந்தாங்கி வாரச்சந்தை செயல்படும் இடம் தஞ்சாவூர் சமஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் சமஸ்தானத்திடம் சந்தையை குத்தகை எடுத்து உள்ள நபர்களுக்கும் உள்ள பிரச்சினையால் வாரச்சந்தை மூடி கிடக்கிறது என கூறப்படுகிறது. வாரந்தோறும் கிராம பகுதியில் இருந்து சந்தையில் பொருட்கள் வாங்க வரும் நபர்கள் சந்தை மூடி கிடப்பதால் திரும்பி செல்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் அறந்தாங்கி வாரச்சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story