பண்ணாரி அருகே லாரியை நிறுத்தி கரும்பை சுவைத்த யானை


பண்ணாரி அருகே லாரியை நிறுத்தி கரும்பை சுவைத்த யானை
x
தினத்தந்தி 20 Oct 2020 2:20 AM IST (Updated: 20 Oct 2020 2:20 AM IST)
t-max-icont-min-icon

பண்ணாரி அருகே லாரியை நிறுத்தி கரும்பை யானை சுவைத்தது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் வருவாய்துறை, வனத்துறை, காவல்துறை சார்பில் 3 சோதனை சாவடிகள் உள்ளன. இந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை சாவடியில் சோதனை செய்வது வழக்கம். இந்த 3 சோதனை சாவடிகளும் வனப்பகுதியில் உள்ளன. இதனால் காட்டுக்குள் உள்ள யானைகள் பசுந்தீவனங்களை, தேடி ரோட்டுக்கு வருவது வழக்கம். அதுபோன்ற நேரங்களில் இந்த வழியாக செல்லும் கரும்பு பார லாரிகளின் டிரைவர்கள் யானைகளுக்கு கரும்பு கட்டுகளை போட்டு பழக்கப்படுத்திவிட்டார்கள். இதனால் நாளடைவில் கரும்புகளை சுவைக்க யானைகள் ரோட்டுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டன. மேலும் அனைத்து லாரிகளையும் தடுத்து கரும்புகள் இருக்கிறதா? என்று மறிக்கின்றன.

கரும்புகளை சுவைத்தது

இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக ஒரு யானை பண்ணாரி சோதனை சாவடியை சுற்றி வருகிறது. வனத்துறையினர் விரட்டி விட்டாலும் மீண்டும் வந்துவிடுகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ரோட்டு ஓரம் ஒற்றை யானை வந்து நின்றது.

அப்போது ஒரு லாரி கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு வந்தது. உடனே யானை ரோட்டின் குறுக்கே வந்தது. இதனால் டிரைவர் லாரியை நிறுத்தினார்.

அதைத்தொடர்ந்து யானை லாரியின் பின்பக்கம் சென்று கரும்பு கட்டுகளை கீழே இழுத்துப்போட்டு சுவைக்க தொடங்கியது.

பட்டாசு வெடித்து

டிரைவர் பயந்தபடியே லாரியின் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.

இதைப்பார்த்த சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது:- யானைகள் அடிக்கடி கரும்புகளை தேடி ரோட்டுக்கு வந்து விடுகின்றன. வனத்துறையினர் யானைகள் காட்டை விட்டு வெளியே வராமல் கண்காணித்து விரட்ட வேண்டும்.

இதேபோல் கரும்பு கட்டுகளை ரோட்டில் போடும் லாரி டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story