குர்லா சுமன் நகரில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி; 5 பேர் படுகாயம் குடிநீர் குழாயை பழுது பார்த்தபோது பரிதாபம்


குர்லா சுமன் நகரில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி; 5 பேர் படுகாயம் குடிநீர் குழாயை பழுது பார்த்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 20 Oct 2020 2:38 AM IST (Updated: 20 Oct 2020 2:38 AM IST)
t-max-icont-min-icon

மும்பை குர்லா சுமன்நகர் பகுதியில் சேதமடைந்த குடிநீர் குழாயை பழுது பார்த்தபோது, மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

மும்பை,

மும்பை குர்லா கிழக்கு சுமன் நகர் பகுதியில் பூமிக்கடியில் செல்லும் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி குடிநீர் வினியோக துறை சார்பில் கணேஷ் தத்து உகலே(வயது45), அமோல் காலே(40), நானா புக்லே(41), மகேஷ் ஜாதவ்(40), நரேஷ்(40), ராகேஷ் ஜாதவ் (39), அனில் சவான்(43) ஆகிய 7 தொழிலாளர்கள் நேற்று காலை 8 மணி அளவில் பழுதுபார்ப்பு பணிக்காக அங்கு வந்திருந்தனர். இதற்காக குடிநீர் கசிவு ஏற்பட்ட இடத்தில் பெரிய குழி தோண்டினர்.

அப்போது, பூமிக்கடியில் செல்லும் கேபிள் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதையறியாத ஊழியர்கள் குழிக்குள் இறங்கியபோது அவர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதில், 7 தொழிலாளர்களும் படுகாயமடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

2 பேர் பலி

உடனடியாக படுகாயமடைந்த 7 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் தத்து உகலே, அமோல் காலே ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கப்பட்டு தொழிலாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story