சங்கரன்கோவில் அருகே கார் மோதி மாணவர் சாவு வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


சங்கரன்கோவில் அருகே கார் மோதி மாணவர் சாவு வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

சங்கரன்கோவில் அருகே கார் மோதி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்த மாடசாமி மகன் மதியழகன் (வயது 16). இவர் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மதியழகன் நேற்று பெரும்பத்தூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவரான குருசாமி மகன் இளவரசனுடன் (16) அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார். அங்கு குளித்து விட்டு, இருவரும் ஒரே சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கார் மோதி சாவு

அப்போது அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் மதியழகன், இளவரசன் இருவரும் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். மதியழகன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த இளவரசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சாலை மறியல்

இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய கார் அங்கு நிற்காமல் சென்று விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், மாணவர் மதியழகனின் உடலை போலீசார் எடுக்கவிடாமல் சங்கரன்கோவில்-ராஜபாளையம் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுந்தரம் (சங்கரன்கோவில்), கோபாலகிருஷ்ணன் (தென்காசி), தாசில்தார் திருமலைசெல்வி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வேகத்தடை அமைக்க கோரிக்கை

அப்போது அவர்கள், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். இறந்த மற்றும் படுகாயமடைந்த மாணவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மதியழகனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

டிரைவரிடம் விசாரணை

இந்த நிலையில், விபத்து தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான கே.வி.ஆலங்குளத்தை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் சுரேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் மோதிய விபத்தில் பள்ளிக்கூட மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story